வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல்

வெளிநாட்டுச்செலாவணியை உடமையில் வைத்திருத்தல்

இலங்கை ஆட்கள் ஐ.அ.டொ 10,000 அல்லது அதற்கு சமமான வேறு வெளிநாட்டு நாணயங்ளை ஏதேனும் காலத்திற்கு வெளிநாட்டு நாணயத் தாள்களாக தமது உடமையில் வைத்திருக்கலாம். இத்தகைய வெளிநாட்டு நாணயங்கள் இலங்கைக்கு வெளியே வதியும் ஒருவரிடமிருந்து சன்மானமாகப் பெறப்பட்டதாக அல்லது பிரயாண நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்வனவுசெய்யப்பட்டதாக அல்லது அவர்/அவளது தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து பிரயாண நோக்கத்திற்காக மீளப்பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

இலங்கையில் வதியும் ஆள் ஒருவர் இலங்கைக்கு வெளியே வதியும் ஆள் ஒருவருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளினை வழங்கியதன் மூலம் பெறப்பட்ட வெளிநாட்டு நாணயங்ளை 7 நாட்கள் வரை தமது உடமையில் வைத்திருக்கலாம் என்பதுடன் அத்தகைய காலப்பகுதியில் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வரவு வைத்தல் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஒருவருக்கு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட முகவர் ஒருவருக்கு விற்பனை செய்தல் வேண்டும்.

அத்தகைய நாணயங்கள் அவர்/ அவளினால் இலங்கைக்கு வெளியே பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுடன் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வணிகர்களுடன் பராமரிக்கப்படும் வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலிருந்து பெறப்பட்டது எனின் எந்தவொரு பெறுமதியான வெளிநாட்டு நாணயங்ளையும் இலங்கையில் வதிவற்றவர் தமது உடமையில் வைத்திருக்கலாம்.

வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருக்கும் காலம்

குறிப்பிட்ட நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட முகவர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்ளை பெற்றுக்கொண்ட ஆட்கள் அத்தகைய நாணயங்களை இலங்கை ரூபாவிற்கு உருமாற்றம் செய்யாது 90 நாட்களை விஞ்சாத காலப்பகுதிக்கு உடமையில் வைத்திருக்க முடியாது.

வெளிநாட்டு நாணயங்கள் இலங்கைக்கு வெளியே ஈட்டப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருப்பின் 90 நாட்களுக்குள் இலங்கை ரூபாவிற்கு உருமாற்றம் செய்யாது அல்லது வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வரவுவைக்காது தமது உடமையில் வைத்திருக்க முடியாது.